இரவை பகலாக மாற்றும் தீபத் திருநாள்

எத்திசையும் கொண்டாடும் 
தித்திக்கும் தீபாவளி

தீபாவளி என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பது இத்தீப ஒளி திருநாளுக்கே, நாம் ஏன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறோம்? அதன் வரலாறு என்ன? தீபாவளியின் பொருள் என்ன? என்ற பல கேள்விகள் நம் மனதில் எழுகின்றது. 

குழந்தைகள் மத்தாப்புகள் வெடித்து மகிழ்கின்றனர்.
https://pin.it/5EBMuy6qM


இந்துகளின் பண்டிகை என்றாலே அது பல புராணக்கதைகளுடன் இணைந்திருக்கும். அதுபோலவே இத்தீப ஒளி திருநாளும் பல புராண இதிகாசங்களுடன் இணைந்து பல கதைகளை தருகிறது. தீப திருநாள், தீப ஒளி திருநாள், தீப ஒளி என பல பெயர்களால் அழைக்கப்படும் தீபாவளியானது பல்வேறு மத மக்களால் கொண்டாடப்படுகிறது. தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்? என்று கேட்டால் அனைவரும் கூறும் கதை பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், நரகாசுனை வதம் செய்த நாளையே தீபாவளியாக கொண்டாடுகிறோம் என்பது தான். ஆனால் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், நரகாசுரனை வதம் செய்தது துவாபரயுகத்தில் தான் நடக்கிறது. அப்படி என்றால் நாம், பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், நரகாசுரனை வதம் செய்வதற்கு முன்பே தீபாவளியை கொண்டடியிருக்கிறோம். அதாவது சிவ பெருமானுக்கு அஷ்ட விரதங்களில் ஒன்றான கேதார கௌரி விரதம் கடைபிடிக்கும் நாளையே தீபாவளியாக கொண்டாடுகிறோம். 


தீபாவளியின் புராணக்கதைகள்: 


நரகாசுரனின் கதை: 

திருமால் வராக அவதாரம் எடுத்து அசுரர்களை அழிப்பதற்காக பூமியை துளைத்து சென்ற போது, திருமாலின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவர் தான் நரகாசுரன். அசுரவதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுரபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்துவிட்டது. நரன் என்றால் மனிதன், மனிதனாக பிறந்தாலும், அரக்ககுணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது. 

இந்த அசுரன் தேவர்களுக்கும், மக்களுக்கும் பல விதமான துன்பங்களை கொடுத்து வந்தான். துயரங்களை தாங்க முடியாத தேவர்களும், மக்களும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். இதனை அறிந்த மகாவிஷ்ணு நரகாசுரனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமாதேவிக்கு பிறந்தவன் என்பதால் தன் தாயை தவிர வேறு எவராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். ஆகையால் மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்து நரகாசுரனுடன் போரிட்டார். அவன் மகாவிஷ்ணு மீது அம்பு எய்தினான். அவன் எய்த அம்பு பட்டு மகாவிஷ்ணு மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதனை பார்த்துக் கொண்டிருந்த சத்திய பாமா கோபம் கொண்டு நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று அறியாத நரகாசுரன் அவருடன் போர் மேற்கொண்டான். அன்னையின் அம்புக்கு பலியாகி நரகாசுரன் சரிந்தான். அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் பூமாதேவியின் அவதாரம் என்று தெரிந்தது. தோல்வியை தழுவிய நரகாசுரன் தன் தாயிடம், நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய துயரத்திலிருந்து விடுபட்ட தேவர்களும், மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து, மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதனை தொடர்ந்தே நரகாசுரன் மறைந்த நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.


இராமனின் வனவாசம் முடிந்த நாள்: 

வால்மீகி இராமாயணத்தில் கொடியவனுக்கும் கொடியவனான இராவணனை ஶ்ரீஇராமன் அழித்துவிட்டு தனது 14 ஆண்டு கால வனவாசத்தை முடித்து கொண்டு மனைவி சீதாதேவி மற்றும் சகோதரன் லட்சுமணனுடன் அயோத்திக்கு திரும்பிய நாளை அந்நகர மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர். அதன் தொடர்ச்சியாகவும் தீபாவளி பிறந்தது என்றும் சொல்லப்படுகிறது.


தீபாவளி கொண்டாடும் முறை: 

தீபாவளி அன்று மக்கள் அனைவரும் அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து, குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து பலகாரங்கள் பல செய்து உண்டு மகிழ்வார்கள். தீபாவளி நாளில் எண்ணெயில் லட்சுமி இருப்பதாகவும், நீரில் கங்கை இருப்பதாகவும் ஐதிகம். கங்கை சகல பாவங்களையும் போக்கும் சக்தி கொண்டது. அதுபோல லட்சுமி நம்மோடு இருந்தால் ஐஸ்வரியம் பெரும். 

இதற்காகவே நம் முன்னோர்கள் இப்படிப்பட்ட நியமங்களை வகுத்திருக்கிறார்கள். தீபாவளி அன்று நாமும் நம் வீட்டில் விளக்குகளை ஏற்றி வைத்து, பட்டாசு வெடித்து தீபாவளியை மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடனும் கொண்டாடலாம்.


Comments

Popular posts from this blog

திருக்கார்த்திகை திருநாள்

உற்சாகமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை

விநாயக சதுர்த்தி