உற்சாகமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை

பாரம்பரிய சிறப்பு மிக்க ஓணம் பண்டிகை 

இந்தியாவின், தென்தமிழகத்திலும் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழாவாக ஆவணி திருவோணம் என்றழைக்கப்படும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மகாவிஷ்ணு மற்றும் மன்னன் மகாபலி ஆகியோரின் நினைவாக ஓணம் பண்டிகையை மக்கள் கொண்டாடுகின்றனர். ஆவணி திருவோணம் என்று அழைக்கப்படும் ஓணம் பண்டிகை மலையாள ஆண்டான சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இவ்விழா கொண்டாடப்படுகிறது. கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதைக் கேரளத்தின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர். 


மகாபலி சக்கரவர்த்தியின் நவீன புனைவு படம் 

மன்னன் மகாபலி சக்கரவர்த்தி 

மகாபலி சக்கரவர்த்தி என்னும் மன்னன் முற்பிறவியில் எலியாக பிறந்தார். ஒரு நாள் சிவன் கோயிலில் திரிந்து கொண்டிருந்த அந்த எலி, அங்கு சிவபெருமானுக்கு அருகில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த ஒரு விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அந்த விளக்கின் திரியின் மீது எலியின் வால் தற்செயலாக பட்டது. மீண்டும் அந்த விளக்கு தூண்டப்பட்டு சுடர்விட்டு பிரகாசமாக எரிந்தது. தன்னையும் அறியாமல் நற்காரியம் செய்த பலனாக, அந்த எலி அடுத்த பிறவில் சிறந்த மன்னரான மகாபலி சக்கரவர்த்தியாக பிறந்தார். அசுரர்களிலேயே மக்களால் மிகவும் நேசிக்கக்கூடிய மற்றும் திறமையாக ஆட்சி செய்து வந்தவர் மன்னன் மகாபலி சக்கரவர்த்தி. ஒரு நாள் மன்னன் மகாபலி சக்கரவர்த்தி நாட்டு மக்களின் நலனுக்காக ஒரு மாபெரும் வேள்வி ஒன்றை நடத்தவும், வேள்வியின் இறுதியில் நாட்டு மக்களுக்கு தான, தர்மம் வழங்க முடிவு செய்தார். இதையறிந்த தேவர்கள் மகாபலி சக்கரவர்த்தியுடன் போரிட்டனர். இதில் மகாபலி வென்றார். இதனால் அச்சமடைந்த தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் கோரிக்கையிட்டனர். தேவர்களை காப்பது தனது கடமை என கருதிய மகாவிஷ்ணு, வாமன அவதாரம் எடுத்தார். மகாபலி சக்கரவர்த்தி தன் நடத்திய வேள்வி நிறைவு செய்யும் வேலையில், மக்களுக்கு தான, தர்மங்கள் செய்ய தொடங்கினார். இந்த தான தர்மங்கள் முடியும் வேலையில் வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு அங்கு வந்தார். 

                வாமணனை பார்த்த மகாபலி சக்கரவர்த்தி, தாமதமாக வந்துவிட்டீரே, இப்போது தான் தானம் கொடுப்பதை நிறைவு செய்தேன் என்றார். அதற்கு வாமனன் நானோ மூன்றடி சிறுவன், நான் பெரியதாக எதையும் கேட்க மாட்டேன். எனக்கு மூன்றடி நிலம் மட்டும் கொடுத்தால் போதும் என்றார். மன்னன் சக்ரவத்தியும் அவர் கேட்டதை வழங்கினார். வாமனன் மூன்றடி மண்ணில் ஒரு அடியால் மண்ணுலகையும், மற்றொரு அடியால் விண்ணுலகத்தையும் அளந்தார் மூன்றாவது அடியை எங்கு வைப்பது என கேட்க, மன்னன் மகாபலி தன் தலை மீது வைக்குமாறு சொன்னார். அதற்கு இணங்க மகாபலியின் தலையில் வாமனன் கால் வைத்ததும், மகாபலி பாதாளலோகம் சென்றார். 

வரம் பெற்ற மகாபலி சக்கரவர்த்தி

அசுரராக இருந்தாலும், மக்களுக்கு நல்லதையே செய்யும் மன்னன் மகாபலி சக்கரவர்த்திக்கு மகாவிஷ்ணு வரம் கொடுப்பதாக முடிவு செய்து உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்! என்றார். அதற்கு மகாபலி, நான் என் மக்களை ஆண்டுக்கு ஒருமுறை வந்து பார்த்து, அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என பார்த்து செல்ல விரும்புகிறேன் என கூறினார். அதனை நிறைவேற்றும் விதமாக நீ உன் மக்களை வந்து பார்ப்பதை உன் மக்கள் பண்டிகையாக கொண்டாடுவார்கள் என மகாவிஷ்ணு அவருக்கு வரம் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கேரள மக்கள் இதனை 10 நாள் திருவிழாவாக கொண்டாடுகின்றனர். இந்நாளில் தான் மன்னன் மகாபலி சக்கரவர்த்தி தன் நாட்டு மக்களை பார்க்க வருவார்.

பூக்கோலமாக காணப்படும் கேரளம் 

ஓணம் பண்டிகை என்றதுமே, அனைவருக்கும் நினைவில் வருவது கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையும்,  

பூக்கோலமும் தான். மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பூக்கோலம் போடப்படுகிறது. "அத்தப்பூ" என்று அழைக்கப்படும் பூ கேரளாவில் அதிகமாக காணப்படும் பூக்களில் ஒன்று. இந்த அத்தப்பூவை ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகளும் பறித்துக் கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதைத்தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். பின்பு, தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர். முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்றெனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். 


ஓணம் பண்டிகை சிறப்பு உணவுகள் 

கேரள உணவுகள் என்றதுமே, நம் நினைவிற்கு முதலில் வருவது புட்டு, கிழங்கு, பயறு வகைகள் போன்றவையே. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி "ஓண சத்யா" என்ற உணவின் சிறப்பைக் கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான உணவுகள் தயாரிக்கப்படுகிறது. அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என பல்வேறு வகையான உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்குப் படைக்கப்படும். இவற்றில் தேங்காய் மற்றும் தயிர் முக்கிய இடம் பெறுகிறது. 


சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள்

10 ஆம் நாளான திருவோணத்தன்று, யானைகளுக்கு விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும் பூக்களால் ஆன தோரணங்களாலும் அலங்கரித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். யானைகளுக்குச் சிறப்பு உணவுகளும் படைக்கப்படும்.

                         கேரளத்தின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகளென 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். 

திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில், மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து நிலத்தில் மகாபலியை அழுத்தி அழித்த இடமாக கருதப்படுகிறது.

மலையாள தேசத்தில் உற்சாகமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை 

   மன்னன் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக ஓணம் பண்டிகையானது இன்று வரை கேரள மக்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மேலும், அவர்களின் அறுவடை திருவிழாவாக ஓணம் பண்டிகை விளங்குகிறது.


Comments

Popular posts from this blog

திருக்கார்த்திகை திருநாள்

விநாயக சதுர்த்தி