திருக்கார்த்திகை திருநாள்

திருக்கார்த்திகை திருநாள் 


திருக்கார்த்திகை என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது தீபம். இக்கார்த்திகை திருநாளென்பது வீடுதோறும் விளக்கேற்றி இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளியின் அருவுருவான கடவுளை வணங்குவதே ஆகும். கார்த்திகை என்றால் கார்காலத்தின் முடிவு என்று பொருள்.

கார்த்திகை மாதத்தில் அனைத்து வீடுகளிலும் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். திருக்கார்த்திகையானது இந்த வருடம் கார்த்திகை மாதம் 28ஆம் தேதி டிசம்பர் 13, 2024 அன்று வெள்ளிக்கிழமை கொண்டாட படுகிறது. 


பண்டைய தமிழர், 27 நட்சத்திரங்களையும் தமிழ் மாதத்தின் ஒவ்வொரு நாளுடனும் ஒப்பிட்டு, அந்த நட்சத்திரத்தின் பெயர் கொண்டு அழைத்தனர். அந்த 27 நட்சத்திரங்களுள் ஒன்று தான் கார்த்திகை ஆகும். இந்த கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தை சிறப்பாக கருதி திருக்கார்த்திகை என பெயரிட்டு கோயில்களிலும் வீடுகளிலும் விளக்கேற்றி வழிபட்டு வந்தனர். 


வழக்கம் போலவே, இந்துக்கள் பண்டிகை என்றாலே அதற்கு பற்பல புராணக்கதைகளும் வரலாறும் உண்டு. அதுபோலவே இத்திருக்கார்த்திகைக்கும் பல வரலாறு உண்டு. கார்த்திகையின் வரலாற்றை காண்பதற்கு முன்பு, கார்த்திகை மாதத்தில் அனுசரிக்கப்படும் மூன்று வித தீபங்களை பற்றி காண்போம். 

குமராலாய தீபம்: 

கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தன்று, முருகப் பெருமான் ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவர். இதனை குமராலாய தீபம் என்று அழைப்பர். 

விஷ்ணுவாலய தீபம்: 

கார்த்திகை மாதத்தில் வரும் ரோகிணி நட்சத்திரம் கிருஷ்ணருக்கு உரியதாகும். இத்திருநாளில் பெருமாள் ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவர். இதனை விஷ்ணுவாலய தீபம் என்று அழைப்பர். 

சர்வாலய தீபம்: 

கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி அன்று அனைத்து ஆலயங்கள் மற்றும் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவர். இதனை சர்வாலய தீபம் என்று அழைப்பர். 

இப்போது கார்த்திகையின் வரலாற்றை காண்போம்...

கார்த்திகையின் வரலாறு 

இந்து புராணத்தின் படி,, பிரம்மன் விஷ்ணு சிவன் ஆகியோரின் முறை படைதல், காத்தல், அழித்தல் என நம்பப்படுகிறது. அன்று ஒரு நாள், படைத்தல் தொழிலில் தலை சிறந்து விளங்கக்கூடிய பிரம்மனுக்கும், காத்தல் தொழிலை சிறப்பாக செய்து வரும் மகாவிஷ்ணுவிற்கும் இடையே தங்களில் யார் சிறந்தவர் என்ற யுத்தம் தொடங்கியது. தங்களின் யுத்தத்திற்கு பதில் கூற இருவரும் ஈசனின் உதவியை நாடினர். 

இருவரின் வாதங்களை கேட்ட ஈசன், அருவுருவான சோதி வடிவமெடுத்து தன்னுடைய அடியையும் முடியையும் யார் முதலில் கண்டு வருகிறார்களோ அவர்களே சிறந்தவர் என்று கூறினார். இதனை கேட்ட விஷ்ணு ஈசனின் அடியைக் காண வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமிக்குள் சென்றார். பிரம்மனோ அன்னப்பறவையாய் உருமாறி ஈசனின் முடி தேடி பறந்தார். பலாயிரம் அடி சென்றும் ஈசனின் அடியைக் காண முடியாமல் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு சரணடைந்தார். ஆனால் பிரம்மனுக்கோ தோல்வியை ஒப்புக் கொள்ள முடியவில்லை. அப்போது ஈசனின் முடியில் இருந்து தாமரை மலரொன்று வீழ்ந்து கொண்டிருந்தது. அதனை எடுத்து கொண்டு பிரம்மன் ஈசனிடம் வந்தார். நான் தங்களின் முடியை கண்டு விட்டேன்; அதற்கு இம்மலரே சாட்சி எனவும் கூறினார். இதனால் கோபமடைந்த சிவன் தாமரை மலரை இனி தன் பூஜைக்கு ஏற்பதில்லை எனவும், பொய் கூறிய குற்றத்தினால் பிரம்மனுக்கு பூமியில் ஆலயம் இருக்காது எனவும் சாபமிட்டார். பிரம்மன் மற்றும் விஷ்ணு தங்களின் தோல்வியை ஒப்புக் கொண்டு, ஈசனே சிறந்தவன் என்று வணங்கினர். தங்களுக்கு காட்சியளித்த அதே சோதி வடிவில் உலக மக்களுக்கு காட்சியளிக்க வேண்டும் என்று வேண்டினர். அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக திருக்கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலையில் ஈசன் சோதி வடிவமாய் உருவெடுத்து மக்களுக்கு அருள்பாலிக்கிறார். 


திருக்கார்த்திகை அன்று ஆலயங்கள் மற்றும் வீடுதோறும் 27 விளக்கேற்றி ஈசன் மற்றும் முருகனின் நாமங்களை கூறி வழிபடுவர். பனைமரத்தினை வெட்டிச் சிவாலயத்தின் முன்முற்றத்தில் நட்டு, அதில் சில அடி உயரத்திற்குப் பனையோலைகளைக் கூம்பு போன்று அமைக்கின்றார்கள். இதனை சொக்கப்பனை என்றும் அழைக்கப்பர். இந்நிகழ்வானது அனைத்து கிராமங்களிலும் திருக்கார்த்திகை அன்று நடைபெறுகிறது. பின்பு இந்த சொக்கபனையிற்கு தீபாராதனை காட்டி, இறைவனின் நாமங்களை கூறி பூஜித்து பின்பு தீபச்சுடரால் கொளுத்தப்படுகிறது. இச்சொக்கப்பனையில் இருந்து வெளிவரும் சுடரில் ஈசனை காணலாம் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவி வருகிறது.

கார்த்திகை தீபம் 

Comments

Popular posts from this blog

உற்சாகமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை

விநாயக சதுர்த்தி