தசரா திருவிழா வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள்
![]() |
| தசரா திருவிழா கொண்டாட்டம் |
தசரா திருவிழா
இந்தியா முழுவதும் ஒரே காலத்தில் கொண்டாடப்படும் ஒரே திருவிழா தசரா. ஆனால், இந்தப் பண்டிகையின் பெயர் இடத்துக்கு இடம் நவராத்திரி, தசரா, துர்கா பூஜை என மாறுபடும். ஆயினும் இப்பண்டிகை அனைத்திற்கும் அடிப்படையாக விளங்குவது அம்மன் வழிபாடு. விஜயதசமி என்றும் அழைக்கப்படும் தசரா , இந்தியாவில் மிக முக்கியமான மற்றும் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். பத்து தலைகள் கொண்ட அரக்கன் ராவணனின் தோல்வியை குறிப்பதே தசரா என்பதன் பொருள்.
தசரா புராணக் கதை
இந்துக்கள் பண்டிகை என்றாலே, அது புராணக்கதைகளுடன் தொடர்புடையதாகவே இருக்கும். அதுபோலவே, இத்தசரா திருவிழாவும்.
1. ராமன் மற்றும் இராவணன் கதை:
ராமன் மற்றும் இராவணனின் கதையை அறியாதவர் இவ்வுலகில் இலர். இந்தியாவில் தசரா கொண்டாடப்படுவதற்கு முதன்மையான காரணம், அரக்க மன்னன் இராவணனை ஶ்ரீராமன் வென்றதை கொண்டாடும் நோக்கில் தான். இந்து இதிகாசமான ராமாயணத்தின் படி, இராவணன் ராமரின் மனைவியான சீதாதேவியை இலங்கை மாநகருக்கு கடத்திச் சென்றான். அவளை மீட்பதற்காக, பகவான் ஶ்ரீராமர், அவரது சகோதரர் லட்சுமணன் மற்றும் ராம பக்தரான அனுமன் ஆகியோருடன், ராவணனுக்கு எதிராக போர் தொடுத்தார். பல நாட்களாக நீடித்த போருக்கு பிறகு ஶ்ரீராமர் இராவணனை வென்றார். அப்போரில் அசுர மன்னன் இராவணனை வென்று ஶ்ரீராமர் தன் மனைவியுடன் அயோத்திக்கு திரும்பிய வெற்றியை போற்றும் விதமாகவே தசரா விழா கொண்டாடப்படுகிறது.
2.மகாசக்தி தேவி துர்க்காவின் வெற்றி:
மற்றொரு இந்து புராணக்கதையின் படி, மகாசக்தியான தேவி துர்க்கா எருமை அரக்கன் என அழைக்கப்படும் மகிஷாசுரனை வதம் செய்த வெற்றியை போற்றும் வகையில் தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது. முக்கோடி தேவர்களின் எதிரியான மகிஷாசுரன் ஒரு சக்திவாய்ந்த அரக்கன். அவரை எந்த ஒரு மனிதனாலும் அல்லது கடவுளாலும் கூட வெல்ல முடியாது. அவரை தோற்கடிக்க, அனைத்து கடவுள்களும் ஒருங்கிணைந்து மகாசக்தியான துர்கா தேவியை படைத்தனர். துர்க்கா தேவி மற்றும் மகிஷாசுரனுக்கு இடையே மாபெரும் போர் நடந்தது. ஒன்பது நாட்கள் நீடித்த கடுமையான போருக்குப் பிறகு, இறுதியாக விஜயதசமியாகக் கொண்டாடப்படும் பத்தாம் நாளில் தேவி துர்க்கா மகிஷாசுரனை வென்றாள். இந்நாளையே தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது.
தசராவின் பாரம்பரிய கொண்டாட்டங்கள்:
தசரா நன்னாளில் இந்தியா முழுவதும் பல விதமான பாரம்பரிய கொண்டாட்டங்கள் நடைபெறும். இந்தியாவில் தசரா பெருந்திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தான் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ராமர் நாடகம்
இந்த நிகழ்ச்சி ராமரின் வாழ்க்கை, அவரது வனவாசம், சீதை கடத்தல் மற்றும் ராமர் மற்றும் இராவணனுக்கு இடையே நடந்த போர் ஆகியவற்றை சித்தரிக்கிறது. இதனை ராம லீலைகள் என்றும் அழைப்பர்.
உருவ பொம்மையை எரித்தல்:
தசரா கொண்டாட்டத்தில், ராவணனின் உருவ பொம்மையை எரிப்பது மிக முக்கிய நிகழ்வாக கருதுபடுகிறது. தீமையின் அழிவைக் குறிக்கும் வகையில் உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன.
ஊர்வலங்கள்:
இந்தியாவின் பல பகுதிகளில், தசரா அன்று பெரும் ஊர்வலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். முக்கியமாக குலசை முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் ஊர்வலத்திற்கு ஈடு இணை ஏதும் இல்லை. பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து வந்து குலசை முத்தாரம்மனை வழிபடுவார்கள். பலர் பல வேடங்களை அணிந்து வந்தாலும் காளி வேடமிட்டு வருபவர்களே இங்கு அதிகம்.
தசரா கொண்டாட்டம் என்பது ஒரு பண்டிகை மட்டுமல்ல, அது நம்பிக்கை, தைரியம் மற்றும் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான ஓர் போரின் ஆழமான அடையாளமாகும். தசரா பண்டிகையானது நம் வாழ்க்கைக்கு தேவையான பல பாடங்களை கற்றுத் தருகிறது.

Comments
Post a Comment